திருட்டு,
மனித மனங்களில்
தங்கிவிட்ட இருட்டு.
வீடுகளையும் வீதிகளையும்
வெளிச்சத்தில்
விளக்கி வைத்து விட்டு
இதயங்களை
இருட்டுக்குள்
பதுக்கி வைத்தல் பிழையல்லவா ?
முத்தானாலும்
முள்ளானாலும்
எல்லை தாண்டி எடுக்காதே.
உனக்கானதை மட்டுமே
நீ எடுத்தால்,
நம் கதவுகளுக்குப்
பூட்டு தேவையில்லை,
நம் வீடுகளுக்கோ
கதவே தேவையில்லை.
திருடுதல்
தீயசிந்தனைகளின்
அடையாள அட்டை,
தூயதைக் கெடுத்து
தீயதை எடுத்தல் என்பது
கடலை விடுத்து
உப்பை எடுக்கும் முயற்சியே.
எட்டி உதைக்கும்
அதிக வட்டி,
திருப்பித் தர மறுக்கும்
விரும்பிப் பெற்ற கடன்,
நேரம் சுரண்டும்
கடமைத் தவறல்,
எல்லாம்
திருட்டின் அவதாரங்களே.
உன் வேலியில்
முருங்கை மரம் நிற்கிறது.
நிற்கட்டும்.
அவன் வேலியில் வெள்ளரி
படர்கிறது.
படரட்டும்.
உனக்குள்ளதில் திருப்தி,
பற்றற்றதில் பற்றுக் கொண்ட
புத்தனின் அடுத்த அதிகாரம் தான்.
அது சரி,
திருட்டு இல்லையேல்
வேலிகள் எதற்கு ?
வேலி தாண்டும் பயிர்களும்
எல்லை தாண்டும் உயிர்களும்
ஆசைக் கால்களின்
அழிவு நீளல்களே.
