வேலை நமதே தொடர் – 10
“இந்த வாய் மட்டும் இல்லேன்னா இவனை நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்” என ஒரு நகைச்சுவை வாசகம் சொல்வார்கள். அது பல இடங்களில் உண்மை ! குறிப்பாக வேலை தேடும் விஷயத்தில் எந்த அளவுக்கு நீங்கள் பேசுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பேச வேண்டுமானால் அதற்கு முதல் தேவை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். தொடர்பாடல் திறன் என அழகுதமிழில் அழைக்கிறார்கள். தெளிவாக, அழகாக, நேர்த்தியாக, வசீகரமாக, எளிமையாகப் பேசுவது என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அடிப்படை ஒன்று தான். நீங்கள் பேசுவதை அவர்கள் அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
கம்யூனிகேஷன் என்பது ஆங்கிலத்தில் பேசுவது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். அப்படியல்ல. ஆங்கிலம் என்பது ஒரு மொழி ! ஒரு மொழியைப் பயன்படுத்தி ஒரு தகவலைத் திறமையாகச் சொல்வது தான் கம்யூனிகேஷன். எந்த மொழி என்பது நீங்கள் எந்த வேலைக்கு முயல்கிறீர்கள் என்பதையோ, எந்த இடத்தில் முயல்கிறீர்கள் என்பதையோ பொறுத்தது. சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, அழகாக, வசீகரிக்கும் விதமாக, சரியாகச் சொல்லி விட்டால் நீங்கள் நல்ல கம்யூனிகேஷன் உடையவர் என்று அர்த்தம்.
இன்றைக்கு பெரும்பாலான நிறுவனங்களில் ஆங்கிலம் தேவைப்படுகிறது. கம்யூனிகேஷன் என்பது ஆங்கிலம் சார்ந்ததாகவே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நுழைய ஆங்கிலமே பிரதானமாகி விட்டது. இந்த ஆங்கில அறிவை எப்படி வளர்த்துக் கொள்வது ?
சிறப்பான கம்யூனிகேஷனுக்கு மூன்று விஷயங்கள் அடிப்படைத் தேவை.
கவனித்தல்
உரையாடுதல்
எழுதுதல்
எவ்வளவு தெளிவாக, சரியானதை, சரியான உச்சரிப்புடன் பேசுகிறோம் என்பது முக்கியம். எவ்வளவு விரைவாக நமது உச்சரிப்பு ஸ்டைலை ஆங்கில உச்சரிப்புக்குக் கொண்டு வருகிறோம் என்பதில் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. இது கொஞ்சம் கடினமான வேலை தான். காரணம் நாம் ஊருக்கு ஒரு தமிழ் உச்சரிப்பு வைத்திருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தைப் பொறுத்தவரை ஒரே உச்சரிப்பாக இருப்பதே சிறப்பு. நமது தாய்மொழித் தாக்கம் அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “இவன் இங்கிலீஷை தமிழ் மாதிரி பேசுவான்” என்று சொல்லும் வகையில் பேசக் கூடாது.
கிராமத்து மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் ரொம்பவே திணறுவார்கள். நகர்ப்புற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசிப் பழகும் வாய்ப்பு அதிகம். ஆங்கில வழிக் கல்வி, பெற்றோரின் தயாரிப்பு என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
பல கிராமத்து மாணவர்களுக்கு “ஐயையோ, நமக்கு ஆங்கிலம் தெரியாதே” என அவர்கள் நினைப்பது தான் குறை. அந்தத் தயக்கத்தை விட்டு வெளியே வரவேண்டுமெனில் நிறைய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் தயக்கமில்லாமல் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க வேண்டும்.
படிக்கும் காலம் ஏகப்பட்ட வசதிகளைத் தரும். அங்கே நீங்கள் சின்னச் சின்னக் குழுக்கள் அமைத்தும், விளையாட்டாக ஆங்கிலம் பேசிப் பழகலாம். புரியாத வார்த்தைகளுக்கு ஆங்கில அகராதி பயன்படுத்துங்கள். அகராதி பயன்படுத்தும் போது ஆங்கில வார்த்தைக்கு, ஆங்கில வார்த்தைகளால் பொருள் சொல்லும் அகராதிகளையே பயன்படுத்துங்கள். ஆங்கிலத்தைத் தமிழில் புரிந்துகொள்வதை நிறுத்திக் கொள்வது ஆங்கிலத்தை விரைவாகக் கற்க வைக்கும்.
நூல்கள் உங்களின் நண்பன். அதிலும் குறிப்பாக ஆடியோ நூல்கள் உங்களுக்கு ஆபத்பாந்தவன். நல்ல சில ஆடியோ நூல்களை வாங்கிக் கேளுங்கள். நீங்கள் சரியாக பேசுகிறீர்களா ? என்பதை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.
இணையம் மூலம் கற்பது இன்னொரு வசீகர வழி. இணையத்தில் உலாவரும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு தளம் யூ-டியூப் (YouTube). சரியாகப் பயன்படுத்தினால் யூ-டியூப் உங்களுக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக மாறிவிடும். இண்டர்வியூ டிப்ஸ் ( Interview Tips ), கம்யூனிகேஷன் டிரெயினிங் (Communication Training ), ஸ்போக்கன் இங்கிலீஷ் (Spoken English) இப்படி உங்களுக்குத் தெரிந்த சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுங்கள். கொட்டிக் கிடக்கின்றன பயனுள்ள வீடியோக்கள்.
“எப்படி உச்சரிப்பது” – என கூகுளில் தேடினால் ஏகப்பட்ட இணைய தளங்கள் உதவிக்கு வருகின்றன. ஒரு வார்த்தையைப் போட்டுப் பொத்தானை அமுக்கினால் அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது. சரியான உச்சரிப்புடன் பேசினால் நமக்கு சட்டென மரியாதை கிடைக்கும் என்பது தான் யதார்த்தம்.
தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இருக்காது. அதில் சும்மா ஒரு மியூசிக் சேனலை ஓட விடுவதோ, ஜோக் சேனல்களைப் பார்த்து குலுங்குவதோ ஆங்கில அறிவை வளர்க்காது. ஒரு ஆங்கில நியூஸ் சேனலை ஓட விடுங்கள். செய்தி வாசிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் சொல்வதை அப்படியேத் திருப்பிச் சொல்ல முயலுங்கள். இது ஒரு நல்ல பயிற்சி முறை.
பள்ளிக்கூடத்திலிருந்தே ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளில் ஒன்று ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்கச் சொல்வது. ஒரு ஆங்கில செய்தித்தாளை எடுத்துக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் செய்தி வாசிப்பாளர் என உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது கையிலிருக்கும் செய்தித் தாளை வாசியுங்கள்.
ஏற்ற இறக்கத்தோடு, தாளலயத்தோடு நிதானமாய் வாசியுங்கள். நீங்கள் பேசுவதை உங்கள் கணினி மென்பொருளிலோ, ஒரு டேப் ரிகார்டரிலோ, அல்லது உங்கள் மொபைலிலோ சேமியுங்கள். பிறகு நீங்கள் பேசுவதை நீங்களே கேளுங்கள். எங்கே தப்பு செய்கிறீர்கள் என்பது புரியும். உங்களுடைய ஆங்கிலம் மிக விரைவாகவே தெளிவான ஒரு கட்டத்தை எட்டி விடும்.
இது பிரபல பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி நிலையங்களில் பின்பற்றப்படும் முறை. நாம் பேசுவதை நாமே திருப்பிக் கேட்கும் போது தான் நமது ஆங்கிலத்துக்கும், பிறருடைய ஆங்கிலத்துக்கும் இடையேயான வேறுபாடுகள் புலப்படும். வார்த்தைகளை முடிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சொல்லப் பழகுங்கள். அது வார்த்தைகளின் அழகை அதிகரிக்கும். தினமும் அரை மணி நேரமாவது ஆங்கிலத்தைச் சத்தமாய் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
வலைத்தளம் ஆரம்பிப்பது இப்போதைய பேஷன்களில் ஒன்று. இலவசமாய்க் கிடைக்கிறது என்பதால் இதில் செலவும் இல்லை. ஒரு பிளாக் ஆரம்பியுங்கள் ! உங்களுடைய சிந்தனைகளை, அனுபவங்களை எழுதுங்கள். எது உங்களுக்குப் பிடிக்குமோ அதை எழுதலாம். சினிமாவோ, அரசியலோ, கல்வியோ எதுவானாலும். எதை எழுதுகிறீர்கள் என்பதல்ல, எப்படி எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். எழுதுவதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டு போவது, எப்படி முடிப்பது எனும் மூன்று முக்கியமான விஷயங்கள் உங்களுக்குக் கைவந்தால் நீங்கள் இதில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
தினமும் காலையில் தத்துப் பித்துத் தத்துவங்களை வாட்ஸப்பிலும், டுவிட்டரிலும் சுழற்றுவதை விட்டு விட்டு, ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். “தினம் ஒரு ஆங்கில வார்த்தை”, “தினம் ஒரு ஆங்கில வாக்கியம்” என்றெல்லாம் குழுக்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஆங்கில அறிவு உயரும்’
நாவல் படிக்க விருப்பமுடையவர்கள் எளிதில் ஆங்கிலத்தில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள் என்பது எழுதப்படாத விதி. சிட்னி ஷெல்டனோ, ஜான் கிரிஸமோ, ஜெஃப்ரி ஆர்ச்சரோ, அகதா கிறிஸ்டியோ நாலைந்து நாவல்கள் வாங்கிப் போட்டுப் படியுங்கள். இவையெல்லாம் இலக்கிய நூல்களல்ல, சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிறைந்தவை. எனவே உங்களுக்கு எளிதாய் வாசிக்க முடியும். ஒரு பொழுது போக்கு உங்கள் பொழுதை ஆக்குவது இங்கே தான்.
படிக்க இப்போது தான் ஆரம்பிக்கிறீர்கள், கஷ்டமாக இருக்கிறது என்றால் காமிக்ஸ் புக்ஸ் படியுங்கள். சினிமா போல சுவாரஸ்யமாக இருக்கும். அதையும் வாசிக்கக் கஷ்டமாக இருந்தால் “ஆடியோ நாவல்கள்” வாங்குங்கள். அல்லது இணையத்திலிருந்து இறக்குமதி செய்யுங்கள்.
ஹாலிவுட் படம் பார்க்கும் விருப்பம் உடையவர்களுக்கு ஒரு நல்ல வழி உண்டு. ஹாலிவுட்டில் வெளியாகும் பிரபல திரைப்படங்கள் பெரும்பாலும் ஆங்கில நாவல்களைத் தழுவி எடுக்கப்படுபவையே. ஒரு படத்தைப் பார்த்து விட்டு அதன் நாவலைப் படியுங்கள். இப்போது கதை எளிதில் புரியும்.
ஆங்கிலப் பாடல்கள் கேட்க விரும்புபவர்கள் பாட்டு கேளுங்கள். அது வேகமான ஆங்கில உச்சரிப்பு மீதான பரிச்சயத்தைத் தரும். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு இப்படிப் பொழுதுபோக்கையும் ஆங்கிலத்தையும் இணைப்பது அற்புதமான வழி.
ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுவது முதல் கட்டம். ஆங்கிலத்தை எப்படிச் சொல்கிறோம் என்பது அடுத்த கட்டம். எதைச் சொல்லப் போகிறோம் என்பதை முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது, எப்படிப் பேசப் போகிறோம் எனும் விஷயம். அது தயாரிப்பைச் சார்ந்தே இருக்கிறது. திடீரென நேரும் உரையாடல்களைத் தவிர நேரம் தரப்படும் எந்த கம்யூனிகேஷனுக்கும் தயாரிப்பு நிச்சயம் தேவை.
பயத்தையும் தயக்கத்தையும் விட்டு விட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. சிறப்பான தயாரிப்பும், பேசப் போகும் விஷயத்தில் நமக்கு இருக்கின்ற ஆழமான அறிவும் தான் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
தன்னம்பிக்கை அதிகரித்தால் பயம் காணாமல் போய்விடும். முதல் முறை பேசும்போது எழுகின்ற தயக்கம் ஐம்பதாவது முறை பேசுகையில் எழுவதில்லை ! எனவே தான் பயிற்சி ரொம்ப முக்கியமாகிறது.
கவனியுங்கள். கவனிப்பு கம்யூனிகேஷனில் மிக முக்கியமான அம்சம். கவனிப்பு தான் என்ன கேட்கப்படுகிறது என்பது குறித்தத் தெளிவைத் தரும். அது தான் நம்முடைய பதிலைச் சரியான பாதையில் பயணிக்க வைக்கும். எனவே கவனிப்பதும், அது தொடர்பாகச் சிந்தித்துப் பதிலளிப்பதும் கம்யூனிகேஷனில் மிக முக்கிய அம்சங்கள்.
நல்ல பேச்சு என்பது குழாயில் ஓடும் தண்ணீர் போல இருக்கக் கூடாது. அது நதி போல் இருக்க வேண்டும். சில இடங்களில் மெதுவாக, சில இடங்களில் வேகமாக, சில இடங்களில் ஏற்ற இறக்கமாய், சில இடங்களில் ஒரே குரலில் எனப் பேச்சு அமைவதே சிறப்பானது. முகத்தில் புன்னகையும், கண்களில் தன்னம்பிக்கையையும் மிளிர விடுங்கள் அப்போது பேச்சுக்கு ஒரு தனி அழகு வந்து விடும்.
நேரம் ! இது கம்யூனிகேஷனில் ரொம்ப முக்கியம். நீட்டி முழக்காமல், சுருக்கிக் குழப்பாமல் சரியான அளவில் பேசுவது ரொம்ப நல்லது. “எனக்குப் பேசத் தெரியாது” என எக்காரணம் கொண்டும் பேச்சை ஆரம்பிக்காதீர்கள். இது தாழ்மையின் அடையாளமல்ல, பலவீனத்தின் அடையாளம். அப்புறம் நீங்கள் என்னதான் நன்றாகப் பேசினாலும் அது பேசத் தெரியாதவனின் பேச்சு போலத் தான் தோன்றும் என்பது உளவியல் உண்மை.
நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதும் உரையாடலில் மிக முக்கியம். உங்கள் சக பணியாளர்களுடனா, உங்கள் உயரதிகாரியுடனா ? உங்கள் நிறுவனத்தின் மிக உயர்ந்த அதிகாரியுடனா? யாரிடம் பேசுகிறீர்களோ அவர்களுக்குத் தக்கபடிப் பேச வேண்டும்.
முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கம்யூனிகேஷன் எனும் கடலை நீந்திக் கடப்பது எளிதே. முடிவெடுங்கள், திட்டமிடுங்கள். வெற்றிகள் வசப்படும்.
10 கட்டளைகள்
- கவனித்தல், உரையாடுகள், எழுதுதல் எனும் மூன்று நிலைகளிலும் இருக்க வேண்டும்.
- தன்னம்பிக்கையுடன் உரையாடுவது அவசியம்
- சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்
- நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்
- இணையத்தில் யூடியூப் போன்ற தளங்களிலுள்ள ஆங்கிலப் பயிற்சி வீடியோக்கள் பாருங்கள்.
- ஆங்கிலச் செய்தித் தாள் படிப்பது, ஆங்கில நியூஸ் கேட்பது பயனளிக்கும்.
- ஆடியோ நூல்கள் கேளுங்கள்.
- எப்படி உச்சரிப்பது என்பதைக் கற்றுத் தரும் இணைய தளங்களைப் பயன்படுத்துங்கள்.
- நீங்கள் ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்ட் செய்து, தவறுகள் திருத்தி பயிற்சி எடுங்கள்.
- அச்சமின்றி ஏற்ற இறக்கத்தோடு பேசிப் பழகுங்கள்.
