நான்
என் எண்பதுகளில்.
பனைமரம் ஏறுகின்றன
என்
பழைய நினைவுகள்.
நெடிதுயர்த்த
பனைமரங்கள்
இளமை முதல் என்
இரு கரங்களுக்குள்
இருந்தவை.
ஏறும் பனைகளின்
எண்ணிக்கை கணக்கிட்டு
தானே
பெண்கொண்டார்கள் அன்று !!
கருக்கலில் கண்விழித்து
நான்காம் ஜாமம்
நகரும் போதே
பனையில் ஊர்ந்து ஏறும்
வாழ்க்கை அது.
காய்த்துப் போன கைகளோடு
பனங்காய் பறித்ததும்,
உச்சியில் உட்கார்ந்து
பாளை வெட்டி
பதனீர் கலயம் கட்டி
கள் உண்டதும்
இன்னும் கண்ணுக்குள் போதையாய்.
பனையில் சாய்த்து வைக்க
மிருக்குத் தடி,
கால்களைக் கட்டிக் கொள்ள
திளாப்புக் கயிறு,
இடுப்பில் தொங்க விட குடுவை,
என்றெல்லாம் சொன்னால்,
படம் வரைந்து
பாகம் குறி என்பார்கள்
இன்றைய
பட்டணத்துப் பொடிசுகள்.
சந்தை வீதியில்
கருப்பட்டி விற்ற என்
பிரிய மனைவி பொன்னம்மா
பாம்பட ஆசையுடனேயே
போய் சேர்ந்து விட்டாள்.
குமரியிலிருந்து
பணத்துக்காய்
பாண்டிக்கு பனையேற
கிராமமே கிளம்பியபோதும்
பிடிவாதப் பிசாசுடன்
என் பனைகளைத் தொட்டு
படுத்துக் கிடந்தவன் நான்.
ஒவ்வோர் அணைப்பிலும்
ஓர் முரட்டுக் குழந்தையாய்,
சுரத்தலில்
ஓர் சூறாவளியாய்
என்னோடு வளரும் என் மரங்கள்.
பனையேறியின் மகன்
எனும் அடையாளம் சொல்ல
வெளியூர் பையன்
வேதனைப்படுவேனோ எனும்
வேதனையில்
கிராமக் குடிசையை
என் தாய்நாடாக்கிக் கொண்டேன்.
ஓருமு€றை
குருத்தோலைப் புழு
குதறிப் கொன்ற பனை மரத்துக்காய்
இரவெல்லாம்
வலித்தது எனக்கு.
இப்போது,
ரப்பர் வைக்க வேண்டுமென்று
பிடுங்கி எறிந்திருக்கிறான்
என் பனை மரங்களை.
ஒவ்வோர்
பனைமூட்டுப் பள்ளத்திலும்
கொத்துக் கொத்தாய் வேர்கள்,
என்
சருகுச் சருமமே வலிக்கிறது.
பாசனம் நிறுத்திய
நரம்புகளே நடுங்குகின்றன.
ஓர்,
பனை மரப்பள்ளத்தில்
என்னைப் புதைத்து விடுங்கள்,
மரமே
என்னை கருணைக் கொலை செய்து
கொண்டு போங்கள்.
இதயம் கதறும் ஓசைகள்
பனை ஓலைகளிடையே
சரசரக்கின்றன.
கரையான் அரித்த
ஓலைச்சுவடியாய்,
பனைக்கால கனவுகளின்
பள்ளத்தாக்கில்
தொய்ந்து போன
என்
தோள்கள் தொங்குகின்றன.
