விடியலுக்கு முன்
எப்போதோ
முளைவிட்ட விதையாய்
சிறிதாய்
கிளை விட்டாய்.
நீ
வேர் விட்ட வினாடிகளையோ
கிளையான கணங்களையோ
என்னால்
கணித்துத் தான்
சொல்ல முடிகிறது.
நீயோ
பூத்துக் குலுங்கிய பின்னும்,
முளைக்கவேயில்லை
என
முரண்டு பிடித்தாய்.
தூக்கணாங்குருவிகள்
குடிவந்த பின்னும்
கிளைகளே இல்லையென
பிடிவாதம் பிடித்தாய்.
என்
விளக்கங்களை எல்லாம்
வாசலிலேயே
வழியனுப்பி வைத்தாய்.
ஆனாலும்
அலகுகள் அகலாமல்
மரங்கொத்தியாய்
இசை கொத்திக் கிடந்தேன்
நான்.
ஓர் நாள்
கண்விழித்துப் பார்த்தபோது
நீ
இலையுதிர் காலத்தில்
இருந்தாய்.
மரங்கொத்தித் தழும்புகள்
மட்டுமே
உன் மனம் முழுதும்.
அப்போது கூட
அவை
பிறப்பின் பாதச் சுவடு
என்றாயே தவிர
காதலின் காலடி என்பதை
ஒத்துக் கொள்ள மறுத்தாய்.
இப்போதெல்லாம்
என் மரங்கொத்தும் மூக்கை
உன்
தோட்டத்தில் நுழைப்பதில்லை.
எனக்கென்று ஓர்
ஆலமரம்
ஓரமாய் நடப்பட்ட பிறகு.
ஏதோ ஓர்
பச்சைக் கிளியிடம்
கண்ணீரோடு சொன்னாயாமே,
அந்த
மரங்கொத்தியின் அலகு
அற்புதமாய் இருந்ததென்று.
