இன்னும் இனிக்கிறது,
நீ
எனக்குத் தந்த முதல் முத்தம்.
கடற்கரையின்
ஈரக்காற்றோடு போரிட்ட
உன் உஷ்ணக்காற்று,
சிப்பி சேகரித்த கைகளோடு
நீ இட்ட முத்து முத்தம்.
உன்னையும் என்னையும் சுற்றி
உலகமே வேடிக்கைபார்த்ததாய்
எனக்குத் தோன்ற
நீயோ
கடல் மணலில்
உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.
பூக்காரியைப் புறக்கணித்து,
சுண்டல் காரனைத் துரத்தி,
பிச்சைக்காரனுக்கு மட்டும்
காசு போட்டதன் காரணம்
இன்னும் கூட எனக்கு விளங்கவில்லை.
பின்பு ஒரு நாள் சொன்னாய்.
தானம் தரும் ஒவ்வொரு காசும்
காதலைக் காப்பாற்றும் என்று
உண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.
பள்ளிச்சிறுமி கண்டெடுத்த
பவள மாலையாய்
இதயத்தீவுக்குள் உன் முத்தத்தை
இறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.
அதற்குப்பின்
உதடுகள் வலிக்கும் வரை,
உணர்வுகள் சலிக்கும் வரை
பலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.
ஆனாலும்
அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்
நிரம்பிவிடவேயில்லை.
நேற்று
நம் குழந்தை முதல் முதலாய்
உதடு குவித்து
என் கன்னத்தில் முத்தமிடும் வரை !!!
