![]()
பிரியமே..
வருடங்கள் எவ்வளவு விரைவாய்,
பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது
பார்த்தாயா நீ ?
உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு,
நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது
உன் கரம் கோர்த்து,
கூந்தலின் இழையிடையே விரல் வரைந்து
மூச்சுக்காற்று மூச்சுத்திணறும் நெருக்கத்தில்
மன்னிப்புக் கேட்ட பொழுதுகள்..
நீயும் நானும் தவிர
உலகத்தில் எல்லாமே ஐந்தறிவு ஜ“வன்கள் என்று,
தூக்கமே தூங்கத்துவங்கிய பின்னிரவுப் பொழுதிலும்,
கதைபேசிக் கதைபேசியே
நாட்களைக் கிழித்தெறிந்த நாட்கள்.
உன் உதட்டுக்கும்
என் உதட்டுக்குமிடையே மட்டும்
ஓயாமல் நடந்துகொண்டிருந்த
தொடர் ஒப்பந்தக் காலங்கள்,
வாழ்த்து அட்டை கவர்களின்
ஓரம் கூடக் கிழியாமல்
காதலின் முத்திரைகள் என்று
முத்தமிட்டு சேமித்துக் கரைத்த வருடங்கள்
இப்போது,
மனசின் வெயில்ப் பிரதேசங்களில்
நிகழ்ந்தவற்றின் சில
நிழல்ப்பதிவுகள் பட்டுமே.
கல்லூரிக்குச் செல்கின்றன நம் குழந்தைகள்.
காதலிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை.
முன்னினைவுகள் வந்து முகம் தட்டும்
பின்னிரவுப்பொழுதில் அவ்வப்போது உன்
முகம் பார்த்துக் கிடக்கிறேன்..
ஆழமாய்த் துயில்கிறாய் நீ,
அதே அழகுடன்.
அடுத்த அறை தொலைபேசியில்
நம் மகள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்
அதே சிரிப்புடன்.