அம்மா.
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மொழிபெயர்த்து
அமுதூட்டுவாய்.
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.
பாவாடைப் பருவத்தில்
என் இடுப்பில்
புடவை கட்டிவிட்டு
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.
ஏனோ எனக்குப் புரியவில்லை.
அறிவுக்குள் காரணங்கள் விளங்காத
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்
பூரித்தாய்.
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது.
அந்தி வந்து வாசல் தட்டும் முன்
நான் வந்து சேரவேண்டுமென்று
கோபக்குரலில் விளக்கினாய்
முழுதாய் படராத இருட்டுபோல
சில இடங்கள் புரியவேயில்லை.
பள்ளிக்கூடத்தின் பலகைகளில்
தரவரிசையில் நான்
தலைகாட்டியபோதெல்லாம்
அடக்கமுடியா ஆனந்தத்தில் அணைத்துக் கொள்வாய்,
அப்போதெல்லாம்
தினம் தினம் தேர்வுகள் வராதா என்று யோசித்திருக்கிறேன்.
வலிகளின்
இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் மடியில் கவிழ்ந்தழுதிருக்கிறேன்.
என் கண்கள் துடைக்கும்
உன் முந்தானை நுனி,
என் வலிகள் பிய்த்தெறியும் உன் விரல் நுனி,
இவைகளின் தைரியத்தில்,
நான்
அழுவதற்குக் கூட அச்சப்பட்டதில்லை.
ஆனால்,
இன்று பயமாய் இருக்கிறது எனக்கு,
எப்போதும் சிரிக்கும்
உன் கண்கள் முழுதும் கண்ர்,
இறுக்கக் கட்டியிருக்கிறாய்
உன் ஆறுதல்க் கரங்களை.
உன் கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றுகிறது.
பாரமாய் என் கழுத்தில்
புத்தம் புதுத் தாலி.
இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.
ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
