என்
பரவசப் படிக்கட்டுகளில்
பனிக்கட்டியாய்
உறைந்த என் மழலையே.
இப்போதெல்லாம்,
என்
விரல்களின் முனைகளில்
நகங்களுக்குப் பதிலாய்
வீணைகள் முளைக்கின்றன.
என்
கண்களுக்குள்
புதிதாய் சில
கருவிழிகள் உருவாகின்றன.
புலரும் காலைகளும்,
நகரும் மாலைகளும்
உன்
புன்னகை விரிப்புகளில் தான்
பயணிக்கின்றன.
உன்
சின்னச் சின்ன அசைவுகளில்
தான்
என் கவிதைக் கனவுகள்
பிரசுரமாகின்றன.
என் உயிரின் நீட்சி,
உன் வரவின் ஆட்சி.
என்னிடம்
வார்த்தைகள் இல்லை.
மலர்க் கண்காட்சிக்குள்
விழுந்து விட்ட
பூப் பிரியை யாய்
பொழுதுகள் உலர்கின்றன.
ஒவ்வொர் நாளும்
என்
கனவுகளின் கதவுகள்
அகலமாய் திறக்கின்றன.
மனசு மட்டும்
கைகளில் இறங்கி வந்து
வயிறு தடவிப் பார்க்கிறது.
நெருங்கி வரும்
உன்
ஜனன நாளை.
