கைத்தடி உடைந்த
குருட்டுக்கிழவன்போல்
தடுமாறி நகரும் கும்மிருட்டு.
சின்ன வாய்க்காலின் எல்லையில்
தென்னம் ஓலைகளோடு
ஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.
காலையில் பெய்த மழையில்
தலைக்குளித்து
மாலை வெயிலில் மஞ்சள் பூசி
கருப்புக் கரைத்த காற்றுடன்
தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீள வயல்..
சேற்றுக் குழிகளுக்குள்
குரல்வளை நொறுங்க
கத்திக் கொண்டிருக்கும்
ஈரத்தவளைகள்.
சொட்டுச் சொட்டாய்
தென்னைமரம் உதிர்க்கும்
சேமிப்புத் துளிகளின்
சலங்கைச் சத்தம்.
சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்
தூக்கம் கலைந்து
சுவடு சுவாசித்து அலையும்
எறும்புக்கூட்டங்கள்
வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்
ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசை
திண்ணைகளில் கூந்தலசைத்துச்
சிரிக்கும்
மண்ணெண்ணை தீபங்கள்.
போர்வைகளைத் துளைக்கும்
சில்மிஷக்காற்று..
கவிதை போல் காதுகளுக்குள்
கூடாரமடித்துக் கிடக்கும்
ஓர் மழைக்காலக் குருவியின்
மழலைப்பாடல்.
கை தொடும் தூரத்தில்
விட்டத்தில் கட்டிய தொட்டிலில்
விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்
என் மூன்று மாதக் குழந்தை..
தொட்டில் கயிறின் முனைபிடித்து
படுக்கைக் கரையில்
முந்தானை முனைகள் மெலிதாய்க் கலைய
விரல் தொடும் தூரத்தில்
அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.
மழலைக்காய் அவள் இசைக்கும்
தாலாட்டில் தான்
தூங்கிப் போகவேண்டுமென்று
ஆழமாகிப் போன பின்னிரவிலும்
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
என்
ஒற்றை மனசு.
