நீண்ட நாட்களாகிறது.
அவள் முகம் பார்த்து.
அவள் பற்றிய நினைவுகளை
மனதிற்குள்
ஓடவிடும்போதெல்லாம்
மனக்கிண்ணத்தில்
மெல்லியதாய்
ஒரு இசை உருவாகும்
ஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.
அவள் சிரிப்பு,
ஹைக்கூக் கண்கள்,
இதயத்துக்குள் ஈட்டி இறக்கும்
அவள் வெட்கம்,
சொர்க்கம் என்பது
மண்ணில் என்பதை
அந்த
தேவதை தரிசனம் தான்
கொளுத்திவிட்டுப் போனது.
அவள் விரல் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாலை
அகலமாயில்லை என்பதை
அறிந்துகொள்வேன்.
உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே
அவளோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்
பகல்
விரைவாய் விழித்தெழுமென்று
விளக்கம் சொன்னதே
தொலைபேசிக்குள்
தொழுகை நடத்திய இரவுகள்தான்.
இப்போது வாழ்க்கை என்னை
கடல்களைத்தாண்டிக் கடத்திவிட்டது
ஆனாலும்
நினைவுகளின் தள்ளுவண்டி
அவள் நடக்கும்
வீதிகளில் தான் நகர்கிறது.
கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி மட்டுமல்ல
காதலும் தான்
என்கிறதே என் காதல்.
உண்மைதான்.
என்றோ விலகிப் போன
அவள் மேல்
எனக்கு
இன்றும் வளர்கிறதே காதல்.
