ஓவியம் வரைய
நினைத்தால்
தூரிகை திருடுகிறாய்.
கவிதை எழுத
நினைத்தால்
என்
கற்பனை திருடுகிறாய்.
கண்மூடிக் கிடந்தால்
விழிகளில் வழியும்
கனவுகளை வருடுகிறாய்.
என்ன தான் செய்வது ?
சிற்பமா ?
சிற்பத்துக்காய் உட்கார்ந்தால்
விழிகளால் செதுக்க மாட்டாயா
உளிகளை ?
ஓவியத்தையும்,
கவிதையையும்
சிற்பத்தையும் தவிர்த்து
இந்த
கவிதை உலகம் எனக்கு
எதையுமே
கற்றுத் தரவில்லையடி கண்ணே.
உன் பிம்பம் படிந்த
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை விட,
அன்றைய உன் மூச்சுக் காற்றை
இன்றும்
இழுத்துப் பிடித்திருக்கும்
என் மொட்டை மாடித்
தென்றலை விட,
நினைவுகளின் கனத்தில்
கழுத்தறுபட்டுப் போகும்
அந்த
கடைசித் துளிக் கண்ரை விட
அடர்த்தியான,
கவிதைகளை என்னால்
எழுதமுடியாமல் போனதால்
இன்னும்
விதவையாகவே கிடக்கின்றன
என் வீட்டுக் காகிதங்கள்.
உணர்வுகளின்
மலர் தீண்டல்கள்
கீறிச் சென்ற காயங்களை,
என்
வார்த்தை வாட்களால்
மீறிச் செல்ல முடியவில்லை.
நீ
கருணைக் கொலையென்று சொல்லி
கொய்தெறிந்த என்னை,
நான்
திருப்பி எடுக்க மறுத்ததாலா
இன்னும்
தொடர்ந்து திருடுகிறாய் ?
