போலிகளின் பற்களைப்
பிடுங்கத் தெரியாத
நீங்கள்,
திருநங்கைகளோடு மட்டும் ஏன்
கேலிக் குரலை எறிகிறீர்கள்?
திருநங்கைகள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.
யாரோ செய்த பாவத்தின்
ஆயுள் கைதிகள்
அவர்கள்,
சாலைகளில்
தினம் தினம்
ஏன் தூக்கிலிடுகிறீர்கள்.
அவர்கள் என்ன
ஆசைப்பட்டு திருநங்கையர்
ஆனார்களா ?
நீங்கள் முழுமையாய்
பிறந்தததிலும்,
அவர்கள்
அரைகுறையாய் அவதரித்ததிலும்,
உன் திறமையும்
அவன் தவறும் எங்கும் இல்லையே.
உங்கள் இதயத்துக்கும்
அவர்கள் இதயத்துக்கும்
இருப்பதெல்லாம் இரண்டு
தமனிகள் தானே ?
காயம் பட்ட நெஞ்சங்களை
கேலி செய்யும்
நீங்கள்
உயர்ந்தவர்கள் என்று எப்படி
உங்களை
பிரகடனப் படுத்திக் கொள்ளலாம் ?
ஆடு தொடா இலைகளாய்
வேலிக் கரையில்
விளைகிறது அவர்கள்
வாழ்க்கை,
எருமைகளோடு வந்து
எட்டி மிதிப்பதை நிறுத்துங்கள்.
இல்லையேல்,
அயலானை அன்புசெய்யச் சொன்ன
அத்தனை மதங்களும்
ஓர்
அர்த்தராத்திரி இருட்டாய்
அர்த்தமற்றுப் போய்விடும்.
