மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,
உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.
உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.
அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.
குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.
பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.
ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,
கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.
பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.
