புதிய வெளிச்சங்கள்
பழைய பிரமிப்புகளை
புறக்கணிப்பின்
பக்கமாய்
புரட்டிப் போடுகிறது.
வெளிநாட்டுப் பயணத்தைத்
துவங்குகையில்
அழகாய்த் தெரிந்த
சென்னை விமான நிலையம்
திரும்பி வருகையில்
அழகின்றிக் கிடந்தது.
அனுமன் தோள்
சஞ்சீவி மலைபோல,
காலம் தன் தோளில்
பல
வருடங்களைச்
சுருட்டிக் கட்டிப் பறந்தபின்
எனக்கு
ஆனா ஆவன்னா அறிமுகப்படுத்திய
ஆரம்பப் பாடசாலைக்குச்
சென்றிருந்தேன்.
கடலெனத் தெரிந்த
பள்ளி மைதானம்
இப்போது
கையளவாய்த் தோன்றியது.
பெரிதாய்த் தெரிந்த
பெஞ்சுகள்
முழங்காலின் பாதியை
எட்டிப் பிடிக்க முயன்று
தோற்றுக் கிடந்தன.
அந்த பெரிய மரமும்,
கழிப்பறையும்
வராண்டாவும்
வித்தையில் சுருங்கிய
விளையாட்டுப் பொருட்களாய்த்
தெரிந்தன.
வாழ்வின் நிலையாமை குறித்த
நிர்ப்பந்த எண்ணங்கள்
நெட்டித் தள்ள
திரும்பினேன்.
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
கதர்வேட்டியில்
கணக்கு வாத்தியார்.
சற்றும் உயரம் குறையாமல்.
