
சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. நண்பர் ஒருவர் அதை எனக்கு வாட்ஸப்பியிருந்தார். கூடவே “இதெல்லாம் சாத்தியமா ?” என ஒரு கேள்வியும் கேட்டிருந்தார்.
அந்த வீடியோவில் ஒருவர் தனது கடன் அட்டையை பர்ஸில் வைத்திருக்கிறார். அப்போது பி.ஓ.எஸ் மெஷினுடன் ஒருவர் அவரருகில் வருகிறார். அவரது பர்ஸின் அருகே அந்த மெஷினைக் கொண்டு சென்றதும் அவரது கார்டிலிருந்து பணம் எடுக்கும் அனுமதி கருவிக்குக் கிடைக்கிறது. அதில் அவர் 100 ரூபாய் என தட்டுகிறார், ஓகே சொல்கிறார்.
பர்ஸ் வைத்திருக்கும் நபருக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியவில்லை. சத்தமில்லாமல் ஒரு பணப் பரிவர்த்தனை அங்கே நடந்து முடிந்து விட்டது. இப்படி ஒரு விஷயம் நடக்க சாத்தியமா என்பதே அவர் கேட்டிருந்த கேள்வி. இதே வீடியோவைப் பார்த்த எனது இன்னொரு நண்பர் “இதெல்லாம் சாத்தியமே இல்லை. சும்மா மக்களை அச்சுறுத்துவதற்காக இப்படியெல்லாம் அனுப்பறாங்க” என்றார்.
கேள்விகளுக்கான சுருக்கமான பதில், இது சாத்தியம் என்பது தான்.
சாத்தியம் என்பதை விட, இது ஒரு புதிய தொழில்நுட்பம் என்பது தான் சரியாக இருக்கும். ஒரு கார்டைப் பயன்படுத்தும்போது அதற்கு நாம் பின் நம்பரைக் கொடுக்க வேண்டும், அல்லது ஓ.டி.பி கொடுக்க வேண்டும், அல்லது பாஸ்வேர்டைக் கொடுக்க வேண்டும். இது தான் சாதாரண வழக்கம். ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே ஒரு கார்டைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்ததன் விளைவு தான் இந்தப் புதிய தொழில்நுட்பம்.
இதை காண்டாக்ட்லெஸ் கார்ட் ( cotactless card ) என்பார்கள். அதாவது தொடர்பு ஏற்படுத்தத் தேவையில்லாத அட்டை. இந்த தொழில்நுட்பத்தை Tap and go என்பார்கள். தமிழில் “தட்டிச் செல்” என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மக்களுக்கு எல்லாமே படு விரைவில் கிடைக்க வேண்டும். முன்பெல்லாம் ஆயிரம் ரூபாய் பணம் தேவையெனில் வங்கிக்குச் சென்று டோக்கன் வாங்கி ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். இப்போது ஏடிஎம் பணத்தைத் தர இரண்டு வினாடிகள் தாமதித்தால் மக்கள் பொறுமை இழந்து விடுகிறார்கள். மொபைலில் ஒரு ஆப் ஓப்பன் பண்ண நாலு வினாடி தாமதித்தால் பதட்டமடைந்து விடுகிறார்கள். ஆன்லைனில் ஒரு வெப்சைட் கொஞ்சம் மெதுவாக லோட் ஆனால் லேப்டாப்பை நாலு தட்டு தட்டுகிறார்கள்.
எல்லாமே மிக வேகமாகக் கிடைக்க வேண்டும் எனும் மனநிலை இன்று உருவாகிவிட்டது. சாப்பிடுவதற்கு ஃபாஸ்ட் புட் , உடலை இளைக்க வைக்க கிரேஷ் டயட், பயணத்துக்கு அதிவேகம் என வாழ்க்கை வேகத்தின் பக்கமாகச் சாய்ந்து விட்டது.
அது தான் தொழில்நுட்பத்திலும் எதிரொலிக்கிறது. அட்டையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கார்டை வெளியே எடுத்து, கருவியில் சொருகி, பின் நம்பர் கொடுத்து, ஓகே சொல்லி.. இப்படி பல செயல்களைச் செய்யக் கூடாது. என்ன செய்யலாம் ? என யோசித்தவர்களுக்கு உதித்த ஐடியா தான் இந்த காண்டாக்ட்லெஸ் கார்ட்.
இது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் எனப்படும் (Near field communication ) அருகாமைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கார்டும், கருவியும் அருகருகே இருக்கும் போது பயனர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் பரிவர்த்தனையை நடத்தி விட முடியும்.
நீங்கள் பயப்படும் முன் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இது எல்லா கார்ட்களிலும் உள்ள வசதி அல்ல. நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் டெபிட், கிரடிட் கார்ட்களில் இந்த வசதி இருக்காது. உங்களுடைய கார்டை எடுத்துப் பாருங்கள், அதில் என்.எஃப்.சி குறியீடு (வைஃபை சிம்பல் போல ) இருந்தால் அந்த கார்ட் இந்த காண்டாக்ட்லெஸ் வகையைச் சார்ந்தது என புரிந்து கொள்ளலாம். இல்லையேல் அது சாதாரண கார்ட்.
அது போல, எல்லா பி.ஓ.எஸ் மெஷின்களை வைத்தும் இந்த பரிவர்த்தனையைச் செய்ய முடியாது. அதற்கு இந்த என்.எஃப்.சி சிம்பல் போட்ட மெஷின்கள் தேவை.
முதலில் இந்த வகைப் பரிவர்த்தனைகளுக்கென தனியே ஒரு கார்ட் வகையை வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது கிரடிட், டெபிட் கார்ட்களில் இந்த நுட்பத்தை விசா போன்ற நிறுவனங்கள் நுழைத்து விட்டன. எனினும் இந்த வகைப் பரிவர்த்தனைகளுக்கென ஒரு வரம்பு வைத்திருக்கின்றனர். அதிகபட்சம் ஒரு பரிவர்த்தனைக்கு 2000 ரூபாய்கள் என்பது பொதுவான வரையறை. கூடவே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நமக்கு எஸ்.எம்.எஸ் கிடைக்கும் வசதிகளையும் செய்து தருகின்றன.
வெளிநாடுகளில் பார் , சூதாட்டம் போன்ற கேளிக்கை விடுதிகளில் இந்த வகை அட்டைகளைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள். பரிமாறுபவர்களே கருவியையும் கொண்டு வந்து செல்லமாய் ஒரு தட்டு தட்டி விட்டு பணத்தைப் பெற்றுச் சென்று விடுவார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் நிலையம், கடைவீதி, திரையரங்குகள், ஷாப்பிங் நிலையங்கள் போன்ற இடங்களில் ஒருவர் சும்மா ஒரு பி.ஓ.ஓஸ் மெஷினை கொண்டு நடந்தாலே எளிதாக டிஜிடல் பிக்பாக்கெட் அடிக்க முடியும். சின்னச் சின்னதாய் நிறைய பரிவர்த்தனைகள் செய்து நம்மை மொட்டையடிக்கவும் முடியும்.
சாதாரண கார்ட்களைப் பயன்படுத்தும் போது நமது வங்கிக் கணக்கு, அதன் தகவல்கள், பேலன்ஸ் போன்ற அனைத்தையும் பேய்மெண்ட் சுவிட்ச் பரிசோதனை செய்த பின்பே ஒரு பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படும். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் அவை எதுவும் இல்லை. இத்தகைய பரிவர்த்தனைகளெல்லாம் நாளின் இறுதியில் கடைக்காரரே வங்கிக்கு அனுப்புவார், அங்கு சரி பார்க்கப்பட்டு செட்டில்மெண்ட் செய்யப்படும்.
வெளிநாடுகளில் பிரபலமாக இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் இன்னும் பிரபலமடையவில்லை. பாதுகாப்பானது என்பது உறுதியானால் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பங்களை நாம் அங்கீகரிக்கிறோம். இன்னும் க்யூஆர் கோட் கூட அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லை. யூபிஐ போன்ற அரசு தொழில்நுட்பங்களையே இப்போது தான் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்
எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்பும். அதைப் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டிருங்கள். அது உங்களை எச்சரிக்கையாய் இருக்க வைக்கும்.
*
சேவியர்
thanthi