எல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் பாதுகாப்பானது’ என நினைத்த விஷயங்கள் இந்த ஆண்டு பாதுகாப்பற்றவையாய் மாறியிருக்கின்றன. இப்போது பாதுகாப்பானவையாய் தோன்றும் பல விஷயங்கள் நாளை பாதுகாப்பு இல்லாதவையாக மாறிவிடும் . தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலின் முன்னோக்கிச் செல்லும் போது அதை எட்டு கால் பாய்ச்சலின் வேகத்தில் பின்னுக்கு இழுக்கின்றன புதுப் புது சவால்கள்.
ஸ்மார்ட் போனில் தகவல்களைத் திருடுவார்கள், வைரசைப் புகுத்துவார்கள், பாஸ்வேர்டைத் திருடுவார்கள் போன்றவிஷயங்களெல்லாம் இன்று பழைய சங்கதிகளாகி விட்டன. திருடர்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதி நவீன அம்சங்களுடன்தான் நமது ஸ்மார்ட் போனை அணுகுகின்றனர்.
இன்றைக்கு பாதுகாப்பு என்பது பாஸ்வேர்ட், பேட்டர்ன் என்பதைத் தாண்டி பயோ மெட்ரிக் வகைக்குத் தாவியிருக்கிறது.கைவிரல்பதிவைக் கொடுத்தால் போன் திறந்து கொள்ளும். அல்லது நம்முடைய முகத்தைக் காட்டினால் திறந்து கொள்ளும் எனும் வகையில் தான் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இன்னும் சில ஸ்மார்ட்போன்கள், அப்ளிகேஷன்கள் குரலை வைத்து இயங்குகின்றன. ‘அண்டா காகாசம் அபூ காகூகும் திறந்திடு சீசே’ என்று சொன்னால் கதவு திறப்பது இப்போது பூதங்களின் கதையல்ல. தொழில்நுட்பத்தின் கதை.
ஓகே கூகிள் என்றால் கூகிள் விழித்தெழுகிறது, ஹேய் அலெக்ஸா என்றால் அலெக்ஸா விழித்தெழுகிறது என குரலை வைத்து கருவிகள் செயல்படும் காலம் இது. விரலுக்கும் குரலுக்கும் இடையே தான் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் இன்றைக்கு பயணித்துக்கொண்டிருக்கின்றன எனலாம்.
இந்த பாதுகாப்புக்கு உள்ளே தான் நமது ஸ்மார்ட் போன் இருக்கிறது. நமது ஸ்மார்ட் போனுக்கு உள்ளே தான் நம்முடைய வங்கிக்கணக்குகள் இருக்கின்றன, நமது தனிப்பட்ட தகவல்கள் இருக்கின்றன, நமது பணப்பரிமாற்றத் தகவல்கள் இருக்கின்றன. யாராவது இந்தப் பாதுகாப்பு வளையத்தை உடைத்து விட்டால் நமது முக்கியமான தகவல்களெல்லாம் இன்னொருவர் கைக்குப் போய்விடும் என்பது சர்வ நிச்சயம்.
இப்போது பாதுகாப்பை உடைக்க நினைப்பவர்களெல்லாம் இந்த மூன்று ஏரியாக்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நமதுகைரேகை, கண்கள், குரல் !
அப்படித் தேடுபவர்களுக்கு லட்டு போல கிடைக்கிறது செல்பிக்கள். செல்பிக்கென சர்வதேசம் உருவாக்கி வைத்திருக்கும் ஸ்டைலில் விரல்களை அப்படியும் இப்படியும் உயர்த்திப் பிடிக்கிறது இளைய சமூகம். அந்த புகைப்படங்களிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுக்கக் கற்றிருக்கிறது தொழில்நுட்ப திருடர் கூட்டம்.
இப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதை உலகுக்கு முதலில் சொன்ன பெருமை ஜப்பானைச் சேர்ந்த ‘ஷங்காய் ஷிம்பன்’ எனும் பத்திரிகைக்குத் தான் சொந்தம். இன்றைக்கு பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பயோ மெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் தான் நிறுவனத்துக்குள் அனுமதிக்கின்றன. கை விரலை வைத்தாலோ, கண்ணைக் காட்டினாலோ, முகத்தைக் காட்டினாலோ கதவு திறக்கும் வகையில் தான் இன்றைய பயோ மெட்ரிக் சோதனைகள் இருக்கின்றன.
இணைய தளங்களில் புகைப்படங்கள் போஸ்ட் செய்யும் போது அதிலிருந்து முகம், கண்கள் போன்றவை திருடர்களால் பயன்படுத்தப்படலாம். அதே போல புகைப்படங்களில் விரல்கள் தெளிவாகத் தெரிந்தால் அதிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுத்து போலியாக உருவாக்கலாம் என அந்த நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.
நாம் எடுக்கின்ற செல்பியைத் தாண்டி, இன்றைக்குக் கிடைக்கின்ற ஹை டெஃப்னிஷன் கேமராக்கள் மூலமாக யார் வேண்டுமானாலும் நம்மையோ, நமது ரேகையையோ நம்மை அறியாமல் புகைப்படம் எடுத்து விட முடியும். அது நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் மாறவும் முடியும்.
சமீபத்தில் இதை வெற்றிகரமாக செய்தும் பார்த்து விட்டார்கள். ஒரு செல்பியிலிருந்த கைவிரல் ரேகையை காப்பியடித்து பாதுகாப்பு வளையத்தை வெற்றிகரமாக உடைத்தும் காட்டி விட்டார்கள்.
நாம் விளையாட்டாய் எடுக்கின்ற செல்பிக்கள் நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாய் மாறியிருக்கிறது. அது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளை அப்படியே எடுத்து அதைக் கொண்டு பாதுகாப்பு வளையங்களை உடைப்பதும் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. டார்க் வெப் எனும் தளத்தில் சட்ட விரோத பரிவர்த்தனைகள் நடப்பதுண்டு. அதில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் தனிநபர் தகவல்கள் ஐம்பதாயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாய் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த தகவல்கள் அனைத்துமே செல்பி புகைப்படங்களோடு இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது ஆன்ட்ராய்டின் ஓகே கூகிள், ஆப்பிள் தயாரிப்புகளின் சிரி, அமேசானின் அலெக்ஸா போன்றவற்றையெல்லாம் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தி வருகிறோம். அவையெல்லாம் ‘கூட இருந்து குழிபறிக்கும் வில்லன்களாக’ மாறியிருக்கின்றன,
நவீன தொழில்நுட்பம் நமது வீடுகளில் கொண்டு சேர்த்திருக்கும் இன்னொரு விஷயம் ஸ்மார்ட் மெஷின்கள். அமேசான் எக்கோ, கூகிள் ஹோம் போன்றவையெல்லாம் நமது வீட்டு வரவேற்பறைகளில் நுழையத் துவங்கியிருக்கின்றன. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ட் மற்றும் மெஷின் லேர்னிங் நுட்பங்களோடு வந்திருக்கும் புத்திசாலிகள் இவர்கள். ‘இளையராஜா பாட்டு ஒண்ணுபோடு’ என்றால் போடும். தமிழ் வேண்டாம் பிலீவர் சாங் ப்ளே பண்ணு என்றால் உடனே மாற்றும்.
பக்கத்தில் எங்கே ஹோட்டல் இருக்கிறது என்றால் தகவலைச் சொல்லும். வெளியே போலாமா டிராபிக் இருக்கா என்றால் அட்சரசுத்தமாய் பதில் சொல்லும். இவையெல்லாம் நவீன வரவுகள். ஆனால் இவை முழு நேரமும் நமது வீட்டில் நடக்கும் உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும், தேவைப்பட்டால் அவற்றை ஏதோ ஒரு கிளவுட் சர்வரில் சேமித்து வைக்கும் என்பதும் திகிலூட்டக்கூடிய சமாச்சாரங்களாகும்.
இந்த கருவிகளின் வழியாக நமது வீட்டுக்குள் ஒரு உளவாளியை சுதந்திரமாய் உலவ விட்டிருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குற்றச்சாட்டை தயாரிப்பு நிறுவனங்களே மறுக்கவில்லை. கூப்பிட்டதும் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக் எப்போதுமே இவை காதை கூர்தீட்டிவைத்துக் காத்திருக்கும் எஞும் உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். சொன்னதை கேட்டு பதில் சொல்லும் இந்தகருவிகளுக்கு கேட்பது யார் என்பது முக்கியமில்லை. சன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஒருவர் கதவைத் திற என்று சொன்னால் கூட டிஜிடல் கதவெனில் திறந்து தரலாம் !
அப்படியே உங்கள் குரலைத் திருடி விட்டால் ‘பணத்தையெல்லாம் என் அக்கவுண்டுக்கு மாற்று என சொன்னால் சமர்த்தாய் மாற்றிவிட்டு அமைதி காக்கவும் செய்யும்.
நமது மொபைலில் நாம் நம்பி தரவிறக்கம் செய்யும் ஆப்கள் கூட பலவேளைகளில் காலை வாரிவிடுகின்றன. பிட்ஸைட் நடத்திய ஒருஆய்வில் மிகவும் பாதுகாப்பானது என நாம் நினைக்கும் வங்கி போன்ற ஃபைனான்சியல் கம்பெனிகளின் ஆப்களிலேயே கால்வாசி ஆபத்தானவை என தெரிய வந்திருக்கிறது. பல ஆப்கள் நமது தகவல்களை அப்படியே இன்னொரு இடத்துக்கு ரகசியமாய்க் கடத்திவிடுகின்றனவாம் !
பல நிறுவனங்கள், எதிரி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க இப்போதெல்லாம் உளவாளிகளை அனுப்புவதில்லை. முழுக்க முழுக்க டிஜிடல் உளவாளிகளை மட்டுமே உருவாக்குகின்றன. இவை ஆப்களாகவோ, சென்சார்களாகவோ, வாய்ஸ் ஹேக்கிங் ஆகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். எதிரியின் தொழில் திட்டம் முதல், அவர்களுடைய ஐடியாக்கள், அவர்களுடைய கொட்டேஷன்ஸ் என எல்லாவற்றையும் திருடிக் கொள்ளும் முனைப்புடன் இவை செயல்படுகின்றன.
அதே போல என்கிரிப்ஷன் செய்யப்படாத புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தும் போதும் நாம் பேசும் தகவல்கள் எளிதில் ஹேக்கர்களால் திருடப்படும் வாய்ப்பு உண்டு. புளூடூத்களின் எல்லையை ஆன்டினாக்களின் உதவியோடு அதிகப்படுத்தி, தொலைவிலிருந்தே நமது தகவல்களைத் திருடும் வழக்கம் புதிதல்ல.
இந்த சூழலில் மொபைலை முழுமையாக பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பு தான். இதனால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
உங்களுடைய மொபைல் சேமிப்பு தளத்தை ‘என்கிரிப்ட்(encrypt)’ செய்து வைத்திருங்கள். அப்போது உங்கள் தகவல்களை யாராவது திருடினாலும் அது பயன்படுத்த முடியாததாய் போய்விடும்.
உங்கள் மொபைல் தொலைந்து போனாலும் அதிலுள்ள தகவல்களை தொலைவிலிருந்தே அழிக்கும் வசதியான, ‘ரிமோட் வைப் (remote wipe)’ ஆப்ஷனை வைத்திருங்கள். வேறு மொபைல், லேப்டால் என எதிலிருந்து வேண்டுமானாலும் உங்கள் தகவல்களை நீங்கள் அழிக்க முடியும்.
புகைப்படங்கள், குரல், போன்றவற்றை இணையத்தில் பதிவிடுவதை நிறுத்துங்கள். உங்களுடைய புளூடூத்தையும், வைஃபையையும் , ஹாட்ஸ்பாட்டையும் தேவையற்ற நேரங்களில் அணைத்தே வைத்திருங்கள். பொதுவிடங்களிலுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள்.
இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் கடைபிடித்தாலே போதும். பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். நமது தகவல்களைப் பாதுகாக்க ஒரே வழி, நாம் விழிப்புடன் இருப்பது மட்டுமே !
*
சேவியர்