“மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
“இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
“நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம் ?” ஏதேனும் நினைவுக்கு வருகிறதா ? சரி, போன வாரத்தில் ? போன மாதத்தில் ? – ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாமே யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும். “பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்” என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம் !
மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கே இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஒரு ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும்.
நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில் காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் எத்தனையோ பேர் பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.
பலரும் செய்யும் ஒரு தவறு, பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம் என நினைப்பது தான். பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது ! எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது !
சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச் சின்னப் பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.
“பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்க” எனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும் வேலைக்காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு ! வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில் நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்க மாட்டோம் இல்லையா ?
ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது.
பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.
பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை. சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள் எந்த வகை ? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும் “உள் நோக்கம்” கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.
சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால் தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு ! சின்னச் சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும். உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா பாராட்டுவீர்கள் ? எல்.கே.ஜி யில் ஹோம் வர்க் செய்யும் போதே பாராட்டுவீர்களல்லவா ? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள். !
நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என முடிவெடுத்துப் பாருங்கள் உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவுகிறது. தனிமனித வளர்ச்சி தானே சமூக வளர்ச்சியின் ஆதாரம் !
ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும். பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து இருப்பதே சிறப்பானது.
பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி என்பது அருவி போல, அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது !
ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.
அன்பு ! அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம். மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும். பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பது தான் துயரம். ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்டமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை.
ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு விஷயம் தேவையானதாய் இருக்கும். மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண். புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண். சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.
“என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாது” என ஒருவரைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள் கையிலேயே இருக்கும் !
நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும் போது அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை வீட்டில் வைக்கும் போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும். கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. பெற்றோரையும் பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில் குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம்.
நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி உற்சாகமாக இருந்தால் தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப் படுபவரைப் போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள். விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல் பகிரப்படவேண்டியவை !
வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்த பரிசு அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அது அபரிமிதமான உற்சாகத்தையும் ஊட்டும்.
பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.
மனம்தரும் எந்தப் பாராட்டும்
வெற்றியின் வீதியில் தேரோட்டும்