கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின் சுகமான ராகம் கேட்கக் கூடும். பள்ளிக்கூட மாணவர்களின் மனதில் கல்லூரிக் காலம் குறித்த கனவுகளின் வண்ணச் சாலை நீளமாகத் தெரியும்.
கல்லூரிக் காலம் வரங்களின் காலம். இந்தக் காலத்தில் என்ன விதைக்கிறோம் என்பதை வைத்தே எதிர்கால விளைச்சல் அமையும். நமது களஞ்சியம் தானியங்களுக்கானதா, பதர்களுக்கானதா என்பதை கல்லூரி வாழ்க்கை தான் நிர்ணயம் செய்கிறது. பலரும் கல்லூரி வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழம்பிப் போய் வாழ்க்கையைக் குழப்பங்களின் கூடாரமாக்கிவிடுகிறார்கள்.
ஊடகங்கள் காட்டும் கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் நாடகங்களாகவே ஆகிவிடும். காதல், கிண்டல், கலாட்டா, சண்டை இவைகளை மட்டும் தானே சினிமா படம் பிடிக்கிறது. இவற்றைத் தாண்டிய கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வகுப்பறைகளுக்குள் இருக்கின்றன.
கல்லூரிக்குச் செல்கிறீர்களெனில் முதலில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. “இந்தியாவில் பல கோடி மக்களுக்குக் கிடைக்காத அருமையான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது” எனும் எண்ணம் தான் அது. இந்த எண்ணம் மனதில் இருந்தால் ஏனோ தானோ எனும் சிந்தனைகளுக்கு முதலிலேயே ஒரு முட்டுக் கட்டை போட முடியும். கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனும் உந்துதலும் கிடைக்கும்.
கல்லூரியில் சேர்ந்திருப்பது கல்லூரியைக் கட் அடித்து ஊதாரித் தனமாய் திரிவதற்கல்ல என்பது உங்களுக்கே தெரியும். வேறு வேலையில்லாமலோ, வெறுமனே பொழுதைப் போக்கவோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதில் உங்களுக்குத் தெளிவு இருக்கும். எனவே அதைப்பற்றி நான் தனியே சொல்லத் தேவையில்லை.
அதிகாலையில் எழுந்து ஒரு வரி விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து தேர்வு அறையில் ஜெராக்ஸ் எடுக்கும் காலம் பள்ளிக்கூடத்தோடு போய் விட்டது. கல்லூரிக் காலம் கொடுப்பதைப் படிப்பதல்ல, படிப்பதைத் தேடிப் பிடிப்பது. முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் அரசு நூலகங்களின் தூசுகளுக்கிடையே தும்மித் தும்மித் தான் தகவல்களைத் தேடினார்கள். எலியைப் பிடிக்க மலையைப் புரட்டும் கடினம் அதில் இருந்தது.
இன்றைய யுகம் மாணவர்களின் வேலையை மிக மிக எளிதாக்கியிருக்கிறது. இணையம் எனும் கடலிலிருந்து ஒரு மௌஸ் கிளிக் மூலம் கப்பல் நிறைய தகவல் மீன்களை அள்ளி எடுக்க முடியும். உலகின் பல்வேறு மூலைகளிலுமுள்ள அறிஞர்களின் சிந்தனைகளை ஏசி அறையில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வாய்ப்பு இந்தத் தலைமுறையின் கரத்தில் இருக்கும் வரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்கள் இன்னொரு வரப்பிரசாதம். ஆர்குட், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் நட்புக் கைக்குலுக்கலுக்கே பயன்படுகிறது. அதே தளங்களை ஆர்வமுடையவர்கள் கல்வியைச் செழுமைப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேள்வி கேட்டு உடனுக்குடன் பதில் பெறும் முறையை பல்வேறு கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் டுவிட்டர் மூலம் மேற்கொள்கிறார்கள்.
கல்வியறிவு பெற்ற ஒருவர், தான் சார்ந்த சமூகத்துக்குப் பயனுள்ள நபராக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான சமூகக் குழுக்களில் தயங்காமல் இணையுங்கள். கல்லூரிக்கு உள்ளே கவின்கலை மன்றம், அறிவியல் குழுக்கள், என்.சி.சி என ஏகப்பட்ட வாய்ப்புகள் அணிவகுக்கும். குழுக்களில் இணைந்து பணியாற்றுவது நாளை அலுவலகங்களிலும், சமூகத்திலும், குடும்பங்களிலும் கலந்து வாழும் பக்குவத்தைப் பயிற்றுவிக்கும்.
குழுக்களில் இணையும்போது ஒரு சின்ன எச்சரிக்கை மணியை மனதில் கட்டி வையுங்கள். சாதி, மதம், மொழி, இனம் என பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தக் குழுவிலும் இணையாதீர்கள். அப்படிப்பட்ட தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நேரத்தை அலுவலக நூலகங்களிலோ, ஆசிரியர்களுடன் உரையாடுவதிலோ செலவிடுங்கள்.
“கனியிருக்கக் காய் கவர்ந்தற்று” என்பது கல்லூரி வாழ்க்கைக்குச் சாலப் பொருந்தும். எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் மது, மாது, பாலியல் என தவறானவற்றையே பெரும்பாலான சினிமாக்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. அத்தகைய பிழைகளில் விழுந்தால் எதிர்காலம் பிழையாகிப் போகும் என்பது உறக்கத்திலும் உங்களுக்குத் தெரிந்தே இருக்கட்டும்.
எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் எனும் இலட்சியம் உங்களிடம் இருக்கும். அதை நோக்கிய பயணத்தைக் கல்லூரிக் காலத்திலேயே துவங்குங்கள். படிப்பில் கவனம் செலுத்துவது முதல், தகவல்களைச் சேமிப்பது வரை உங்கள் கவனம் இலட்சியம் சார்ந்து இருப்பது சிறப்பு.
பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் இணையுங்கள். கல்லூரிக் காலத்திலேயே நீங்கள் உங்கள் கூச்ச சுபாவத்துக்குக் கொள்ளி வைத்தால் எதிர்காலத்தில் இண்டர்வியூ, குழு உரையாடல் போன்றவற்றில் வெற்றிக் கொடி கட்ட உங்களுக்கு ரொம்பவே வசதியாய் இருக்கும்.
தாழ்வு மனப்பான்மைகளில் மாணவர்கள் தடுக்கி விழும் காலம் கல்லூரிக் காலம் என்கின்றன புள்ளி விவரங்கள். பெரும்பாலும் படிப்பு குறித்த கவலையோ, பிற மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் மீதான கருத்து வேறுபாடோ, காதல் நினைவுகளோ இத்தகைய மனநிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்வதுண்டு. அத்தகைய மன அழுத்தங்களை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம்.
கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் கவனிக்காமல் விட்டு விடும் முக்கியமான ஒரு விஷயம் உடல்நலம். கண்டதையும் தின்பது, கெட்ட பழக்கங்களில் விழுவது, இரவு தூங்காமல் நீண்டநேரம் விழித்திருப்பது என பலருக்கும் உடல்நலம் குறித்த கவலையே இருக்காது. அது பிற்காலத்தில் பிரச்சினையை உண்டாக்கிவிடும். உடற்பயிற்சி, சரியான உணவு, உறக்கம் இவையெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.
காலையில் அலறி அடித்து எழும்பி, பிரேக் பாஸ்ட் சாப்பிடாமல் காலேஜ் ஓடுவது காலேஜ் பசங்களுக்கே உரிய ஒரு கெட்ட பழக்கம். ரொம்பநேரம் படுக்கையில் புரண்டு சோம்பலில் புரளாமல் காலையில் எழும்பி ஒரு சின்ன உடற்பயிற்சியோடு தினத்தை ஆரம்பித்துப் பாருங்கள். உங்கள் உடலில் குடிகொள்ளும் உற்சாகம் மனதையும் இளசாக்கி வைக்கும்.
எதையும் அசட்டுத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் காலம் கல்லூரிக் காலம். தினவெடுத்த தோள்களும், உரம்படைத்த மனமும் வாய்க்கும் காலமும் கல்லூரிக் காலம் தான். இந்தக் காலத்தில் வம்புகளில் போய் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.
இரவில் அலைந்து திரிவது, கல்லூரி விதிமுறைகளை கொஞ்சம் மீறிப் பார்ப்பது போன்றவையெல்லாம் உங்களை ஆயுள் கால தவிப்பில் விட்டு விடக் கூடும் என்பதை மறக்காதீர்கள். நண்பர்கள் வற்புறுத்துகிறார்களே என்பதற்காக உங்களுக்கு விருப்பமில்லாத எந்த செயலையும் செய்யாதீர்கள். தேவைப்படும்போது தயங்காமல் ஆசிரியர் உதவியை நாடுங்கள்.
பாட புத்தகங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதைத் தாண்டி, மனிதர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் கல்லூரிக் காலம் உதவும். கல்லூரிக் காலம் உங்களுக்கு ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே நீங்கள் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
படிப்பில் ஆர்வமுடைய நண்பர்களைக் கொண்டிருங்கள். இணைந்து படிப்பது கல்வியின் ஆழத்தை அதிகரிக்கும். குறிப்புகள் எடுத்துப் படிப்பது, வகுப்பறையில் கவனமாய் இருப்பது போன்ற அடிப்படை விஷயங்கள் எப்போதும் மனதில் இருக்கட்டும். எடுத்த குறிப்புகளைக் குப்பை போல சேர்த்து வைக்காமல் கணினியில் சேமித்து வைப்பது ரொம்பவே பயன் தரும்.
மிக முக்கியமான ஒரு விஷயம், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என்பதை உணருங்கள். வெற்றிகளை தாழ்மையுடனும், தோல்விகளை இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளப் பழகினால் தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கலாம்.
கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வைத்தவுடன் தனது கடமை முடிந்து போய்விட்டது போல ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் பெற்றோர் பலர் உண்டு. கல்லூரியில் பிள்ளைகள் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள், அவர்களுடைய ஆசிரியர்கள் யார், வகுப்பறை எங்கே இருக்கிறது, என எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. பெற்றோர் இந்த விஷயத்தில் மாணவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.
பிள்ளைகள் என்னென்ன குழுக்களில் இணைந்திருக்கிறார்கள், அவர்களுடைய கல்லூரி வருகை எப்படி இருக்கிறது, அவர்களுடைய நண்பர்கள் யார் எனும் சில விவரங்களை அறிந்து வைத்திருங்கள். அதே நேரம் பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். பள்ளிக்கூடக் காலத்துக்கும், கல்லூரிக் காலத்துக்குமிடையே மாணவர்களுடைய செயல்பாடுகளில் வேறுபாடுகள் தெரியும். பெற்றோர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். குய்யோ முய்யோ என கத்தி நிலமையை விபரீதப்படுத்தாமல், சில நெறிப்படுத்தும் வழிகாட்டல்களோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கல்லூரி என்பது அறிவின் நீரூற்று ! மாணவர்கள் அந்த அறிவைப் பருக வந்திருக்கும் பறவைகள். எனவே கல்லூரிக் காலத்தை வீணாக்காமல் அறிவையும் நல்ல பண்புகளையும் பெற்றுக் கொள்வதில் நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் வாழ்க்கை உங்களை வசந்தச் சிறகுகளோடு வரவேற்கும்.
அறிவுச் சிறகு விரியட்டும்
வானம் கண்ணில் தெரியட்டும்.