பாட்டி,
இன்னும் கொஞ்சம்
மூச்சைப் பிடித்துக் கொள்.
நீ
சொன்ன இடம் தூரமில்லை.
நீ நடக்கவேண்டாம்.
அங்கே
செல்வதற்குள்
உன் பாதத்தின் சுவடுகளில்
மரணம் வந்து
படுத்துக் கொள்ளலாம்.
நான்
சுமக்கின்றேன்,
எம்
தந்தையர் தலைமுறையையே
சுமந்தவள் நீ,
உன்னைச் சுமப்பதே
என்
தலைமுறையின்
தலையாய கடமை.
வலுவானதாய்
உன்னிடம் இருப்பதே
இந்தக்
கைத்தடி மட்டும் தான்
இறுகப் பற்றிக் கொள்.
கசக்கிப் போட்ட
கதராடையாய்
கிடக்கிறது உன் மேனி,
என்
பாசச்சூட்டில் கொஞ்ச நேரம்
சுருக்கம் களை.
சாதிக்க முடிந்த காலங்களில்
சமுத்திரங்களையே
கடந்திருப்பாய்,
இப்போது
பாதமளவு
தண்ணீர் கூட உனக்கு
புதைகுழி ஆகி விடலாம்.
விரல்களை விட்டு விலகாதே.
குஞ்சின் கரங்களுக்குள்
சுருண்டு கிடக்கும்
ஓர்
தாய்கோழியாய்
தலை துவள்கிறாய்.
உனக்குள்
செரிக்க முடியா
எத்தனை மலைகள்
எழுந்து நிற்கின்றனவோ,
அணைக்க இயலா
எத்தனை எரிமலைகள்
கொழுந்து விடுகின்றனவோ.
மூச்சை
இழுத்துப் பிடித்துக் கொள்
பாட்டி,
இதோ
நீ சொன்ன இடம் வந்து விட்டது.
காரில் இறங்குகிறான்
உன் செல்ல மகன்.
உன்னை
முதியோர் இல்லத்தில்
முன்பொருநாள் வீசிய
அதே மகன்.
இன்னோர் முறை
சுருங்கிய கண்களை
இன்னும் கொஞ்சம் சுருக்கி
பார்த்துக் கொள்.
உள்ளே
உன் புகைப்படம்
இருக்கக் கூடும்.
குடும்ப அட்டையில்
நீ
இன்னும்
உரிமையோடு இருக்கக் கூடும்.
அருகே சென்று
பேச எத்தனிக்காதே.
உன்னைப் பார்த்தால்
‘அங்கே உனக்கென்ன குறை’
என்று
சட்டென்று அவன்
கேட்டு விடக் கூடும்.
அது
மிச்சமிருக்கும்
உன்
மூன்றங்குல உயிரையும்
நசுக்கி விடக் கூடும்
என்
கைகளிலிருந்தே
கண் நிறைத்துக் கொள்.
இறங்கிப் போக நினைக்காதே.
உன்னை
இறக்கி விட்டால்
இறந்து விடுவாயோ என
பயமாய் இருக்கிறது எனக்கு.
