ஆழத்தில்
எட்டிப் பார்க்கிறேன்,
எங்கும்
நெருப்பு நாக்குகள்
நெடுஞ்சாலை அகலத்தில்
நிமிர்ந்து நிற்கின்றன.
தரைமுழுதும்
கனல் கம்பளம்
பெரும்பசியோடு
புரண்டு படுக்கிறது.
மரண அலறல்கள்
வலியின் விஸ்வரூபத்தை
தொண்டைக் குழியில் திரட்டி
எரிமலை வேகத்தில்
எறிகின்றன.
ஆங்காங்கே
சாத்தானின் குருதிப் பற்கள்
கோரமாய்,
மிக நீளமாய் அலைகின்றன.
காதுக்குள் அந்தக் குரல்
உஷ்ணமாய்க் கசிந்தது.
வாழ்க்கை உனக்கு
எதையெதையோ பரிசளித்தது,
அந்தப்
பரிசீலனையின் முடிவில்
மரணம் உனக்கு
நரகத்தைப் பரிசளிக்கிறது.
நீ
வீட்டுக்குள் சுவர்க்கம் கட்ட
ஓடி நடந்தாய்,
அப்போது
உன்னால் நிராகரிக்கப் பட்டவர்கள்
நரக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
சில பிச்சைப் பாத்திரங்களை விட
உனக்கு
உன்
சிற்றின்பச் சங்கதிகளே
அதிகமாய் சிந்தையில் இருந்தது.
வேலிகளைக் கொண்டு
உன்
சொர்க்கத்தைச் சிறைப்படுத்தினாய்,
உன்
எல்லைக்கம்பிகளில் கிழிபட்டன
ஏராளம் கந்தல் துணிகள்.
நீயோ,
ஆண்டவன் உன்னை
அபரிமிதமாய் ஆசீர்வதித்ததாய்
கர்வப்பட்டாய்,
கடவுளோ
உன்னிடம் கொடுத்தனுப்பியவை
சரியான விலாசங்களுக்கு
வினியோகிக்கப் படவில்லையென
கவலை கொண்டார்.
நரகம்
அன்புப் பாசனம் செய்யாதோருக்காய்
செய்யப்பட்டிருக்கும்
நெருப்பு ஆசனம்,
போ,
இனிமேல் உன்னை
மரணமும் அண்டாது,
நெருப்பும் அணையாது
இதுவே
உன் நிரந்தர இல்லம்.
சொல்லிக் கொண்டே
என் முதுகில் பிடித்து
யாரோ
முரட்டுத் தனமாய் தள்ளினார்கள்.
முகத்தில்
தீ
கருகக் கருக
நான் கீழேஏஏஏஏஏஏ விழுந்தேன்.
எழுந்து
படுக்கையில் அமர்ந்தபோது
விடிந்திருந்தது,
வெளியேயும் உள்ளேயும்.
0
