கவிதை எழுத
மறந்து விட்டேன்.
எத்தனை முயன்றும் வரவில்லை.
என் கவிதைச் செடிகளுக்கு
செயற்கைத் தண்ணீர்
பச்சையம் தரப் போவதில்லை.
என்
விரல்களின் நுனிகளில்
இறுகக் கட்டியிருந்த
வீணை நாண்கள்
வெறும் கம்பிகளாய் நீள்கின்றன.
என்
நகங்களுக்குள்ளும் நான்
நட்டுவைத்திருந்த
நந்தவனங்களுக்கு,
இயந்திர வாசம் இப்போது.
பூக்களைப் பறித்துக் கொண்டு
சாலையில் இறங்கினால்
புழுதி வந்து
போர்வை போர்த்துகிறது.
கண்ணாடிக் கவிதையோடு
வாசல் தாண்டினால்
நெரிசல்களால்
நெரிபட்டுப் போகிறது.
அடைமழைச் செய்திகள்
அவ்வப்போது
ஆக்ரோஷமாய் வந்து
அடைகாக்கும் முட்டைகளை
உடைத்துச் செல்கின்றன.
அத்தனையும் மீறி
வந்தமரும் வேளைகளில்,
நிகழ்கின்றன
விரல்களின் வேலை நிறுத்தம்.
இந்தக் கவிதை போலவே
முற்றுப் பெறாமல்
நிற்கின்றன
அரைகுறை சிறகுகளோடு,
என் கவிதைகள்.
