இந்த மரத்துக்கும்
எனக்கும்
தலைமுறைப் பழக்கம்.
நான்
சிறகு விரித்ததும்
என்
அடைகாப்பின் அடைக்கலமும்
இந்த மரம் தான்.
இதன்
கடந்த கால
இலைகளுக்கும்,
நிகழ்கால முளைகளுக்கும்
என் அலகுகள்
வாழ்த்துச் சொன்னதுண்டு.
இதன்
கிளைகள் எல்லாம்
என்
நகப் பதிவுகளை
புன்னகையோடு
பெற்றுக் கொண்டவை தான்.
நான்
மாடியில் கட்டிய
குடிலுக்கு,
அஸ்திவாரம் இதன்
பூமியில் புதைந்த
வேர்கள் தானே.
இந்த மரம் தான்
என்
தாய் வீடும்,
நான் தாவும் வீடும்.
எனக்கும்
இந்த மரத்துக்குமான
உறவு
உனக்கும்
இதற்கும் இல்லை.
ஏதோ,
காகிதக் கரன்சிகளை
கைமாற்றிக் கொண்டு
கோடரியால்
கொள்ளையடித்துப் போகிறாய்.
குளத்தோரமாய்
கலைந்து கிடக்கிறது
என் கூடு.
காலை மிதித்தாலே
கவலைப்படும்
நாகரீகவாதிகள் நீங்கள்.
வீட்டை இடிக்கும் முன்
சிறு
முன்னறிவிப்பு கூட தரவில்லையே.
எதிர்ப்பு எழும்
இடத்தில் மட்டும் தான்
ஆறாவது அறிவுக்கு
அங்கீகாரமோ ?
என்
ஐந்தாவது அறிவுக்கு
யாரேனும்
அறியப்படுத்துங்களேன்.
