வழிதேடுகிறேன்
ஃ
முதல் நாளே
பென்சிலைத் தொலைச்சுட்டேன்,
அப்பா கேட்டால் அடிப்பார்,
அம்மாவிடம் சொன்னால்
திட்டு விழும்,
பக்கத்து சீட் பையனிடம் இருக்குமா
உபரியாய் இன்னொன்று ?
அல்லது,
ஒத்துக் கொள்வானா ?
இருப்பதை இரண்டாய் உடைக்க
ஃ
சிவப்பு நிற
ரிமோட் கார்,
மல்யுத்த வீரர்களின்
போட்டோ கார்ட்கள்,
புத்தம் புதிய
புத்தகப் பை,
எல்லாவற்றையும்
காட்ட வேண்டும்.
கிடைப்பானா ஒரு நண்பன்
இன்றைக்கே ?
ஃ
நேற்றுவரைக்கும்
இருந்த விளையாட்டுச்
சுதந்திரம்
வெள்ளைத் துணியாலே
கொள்ளை போயிடுச்சு.
தெருவிளையாட்டெல்லாம்
புதிய புத்தகத்துக்குள்ளே
புதைஞ்சு போயிடுச்சு.
ஆண்டவா,
மிகப் பெரிய மழைதருவாயா ?
புத்தகங்களுக்குள்ளே
அடைகாக்க
நான்கைந்து மயில்பீலி,
உப்புத் தண்ணீரில் போட
ஓரிரு கடல்குச்சு,
புத்தகத்து அட்டையில் ஒட்ட
சக்திமான் ஸ்டிக்கர்,
எல்லாம் எடுத்து வெச்சாச்சு.
எப்போ வருமோ
பள்ளிக்கூட பஸ்.
ஃ
ஃ
அப்பா கண்டுபிடிப்பாரா
பாக்கெட்டிலிருந்து எடுத்த
ஒரு ரூபாயை ?
திரும்ப வைக்கலாமா ?
இல்லை
வாசலோர பாட்டியிடம்
மிட்டாய் வாங்கலாமா ?
அம்மா என்ன செய்வார்களோ
பாக்கெட்டிலிருந்து எடுத்த
பத்து ரூபாயை.
ஃ
நாளைக்கு பரீட்சையாமே
எப்படித் தப்பிப்பது ?
காய்ச்சல் வருமா ?
வாசல் நிறைக்கும்
மழை வருமா ?
வாத்தியாருக்கேனும்
காய்ச்சல் வருமா ?
இல்லை
படித்துத் தான் ஆகவேண்டுமா ?
ஃ
தனிமைத் தவிப்புகள்
ஃ
தண்ணி எடுக்கப் போன
அம்மா,
தண்ணி அடிக்கப் போன
அப்பா,
வீடு முழுதும்
நிறைந்திருக்கிறது வெறுமை.
நான் காத்திருக்கிறேன்
தனிமையின்
வாசல்களில் தவிப்போடு !
அம்மா,
இனிமேல்
தங்கையை அடிக்கமாட்டேன்,
சமையலறைப் பக்கம்
சண்டித்தனம் பண்ணமாட்டேன்,
தேவையானால் கூட
அழமாட்டேன்,
என்னை
பள்ளிக்கு மட்டும் அனுப்பாதேம்மா.
ஃ
