இதோ
தை மாதக் குதிரையில்
வருகிறது திருவிழா.
வாசல்களே,
உங்கள்
குப்பைகளைத் துரத்தி
கோலத்தின் முத்ததுக்காய்
குளித்துக் காத்திருங்கள்.
சுவர்களே
உங்கள் அழுக்கு ஆடைகளை
சுண்ணாம்பு
வேட்டிகளால்,
சுற்றி மறையுங்கள்.
கொட்டில் மாடுகளே
வாருங்கள்,
உங்கள் தொட்டில்
முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
புதிய பானைகளே
பொறுத்திருங்கள்,
உங்கள் உள்ளம் பொங்கி வழிய
இதோ
நாள்காட்டிகளும்
பட படக்கின்றன.
வயல்காற்றே வாருங்கள்
எங்கள்
வியர்வையின் ஈரத்தை
உணவின் சாரமாக மாற்றியது
நீங்கள் தான்.
திண்ணையில் வந்தமருங்கள்.
பூமித் தாயே
பெருமிதம் கொள்,
நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை
இன்னும் எங்கள்
கணிணிக் கூடங்களால்
தயாரிக்க இயலவில்லை.
எல்லோரும் வாருங்கள்,
மனம் பொங்க மகிழுங்கள்
இது
தமிழர் கலாச்சாரத்தின்
தனி அடையாளம்.
அறுவடையின் ஆனந்தத்திலும்,
வறுமையின் வேதனையிலும்,
நன்றி மறக்காத
என் தமிழ்த் தலைமுறையின்
தன்மான அடையாளம்.
கலாச்சார வேர்களை
ஆழ உழுது வை.
வயலில்லையேல் செயலில்லை
என்பதை
சிந்தையில் தை.
இதோ
வந்து விட்டது தை.
0
