மரச் சிலுவையில்
மனிதாபிமானம்
அறையப்பட்ட நாள்.
பூப் பூத்த குற்றத்துக்காய்
பூச் செடிக்கு
தீச் சூளை பரிசு.
பாதைகளை செதுக்கியதற்காய்
பாதங்களுக்கு
மரண தண்டனை.
சுட்டது என்பதற்காய்
சூரியனுக்குச்
சிறைச்சாலை.
அதெல்லாம் இருக்கட்டும்.
யாரிந்த நாளை
துக்க தினம் என்பது ?
மடியாத விதைகள்
ஒற்றை மணிதான்.
மடிந்த பின்பு தானே
பலமடங்காய் பரிமளிக்கும் !
விதைப்புக்காய் யாரேனும்
அழுவீர்களா ?
அலைந்து கொண்டே
இருந்தால்
மேகங்கள் மேகங்களே.
விழுந்தால் தானே
வாழ்விக்கும் மழை !
மழைக்காக மகிழாமல்
அழுவீர்களா ?
சமத்துவம் போதித்த
தேவன்
மரணத்தில் கூட அதை
பின்பற்றியது சரிதானே.
சரியான ஒன்றுக்காய்
தவறாமல் அழுவீர்களா ?
முற்றுப் புள்ளியென்ற
ஒற்றைப்புள்ளிதானே
ஆக்கிய வாக்கியத்தை
முழுமையாக்கித் தருகிறது!
முழுமைக்காய் நீங்கள்
முக்காடிட்டு அழுவீர்களா ?
தயவு செய்து
இதை
துக்க தினம் என்று
பிரகடனப் படுத்தாதீர்கள்.
இது,
விண்ணகத்தின் முளை
மண்ணில் விழுந்த நாள்.
அடையாள அழுகைக்காரரிடம்
இயேசுவே சொல்கிறார்.
எனக்காக அழவேண்டாம்.
உங்களுக்காகவும்
உங்கள்
பிள்ளைகளுக்காகவும்
அழுங்கள்.
