மதிப்பெண் பட்டியல்
ஒற்றை எண்ணில்
என்
கனவு எல்லையில்
கண்ணிவெடி வெடித்தபோதும்,
ஆயிரம் நிறங்களோடு
எனக்குள்
பறந்த ஓர் அலுவல் பறவை
சிறகுகள் கருப்பாகிச்
சரிந்த போதும்,
தேடி நடந்த இடமாற்றம்
கடலில் விழுந்த
கடுகு மணியாய்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
களவாடப் பட்டபோதும்,
உயிர்த் தெப்பத்தில் மிதந்த
காதல் பூ
கால வெப்பத்தில்
கருகியபோதும்,
அகம் அடித்துக் கொண்டது
எனக்கு
அதிர்ஷ்டம் இல்லை.
சுற்றியிருப்போர் மட்டும்
சொல்கிறார்கள்,
அவனுக்கென்ன,
அவன் அத்தனையும் பெற்ற
அதிர்ஷ்டக்காரன்.
