பயமாக இருக்கிறது.
நேற்று வரை
நினைக்கும் போதெல்லாம்
அறுவடை செய்ய முடிந்த
என்
வயலில் இப்போது
வைக்கோல் கூட வளரக் காணோம்.
நினைக்கும் போதெல்லாம்
நான்
ஈரம் இழுத்தெடுத்த
என் கூரை மேகத்தைக் காணவில்லை.
அகலமான ஆறு
ஓடிக் களித்த என் முற்றத்தில்
கால் நனைக்கக்
கால்வாய் கூட காணப்படவில்லை.
கிளைகள் வளரவில்லையேல்
பரவாயில்லை
முளைகளே வரவில்லையேல்
என்ன செய்வது.
தானே
நிரம்பிக் கொள்ளும் என்
காகிதக் கோப்பைகளில்
காலம் வந்து
ஓட்டை போட்டு விட்டு ஓடிவிட்டதா ?
எனக்குள்
சிறகுவிரிக்கத் துவங்கியிருக்கிறது
பயமெனும் சாத்தான்.
அது இப்போது
தன் நகங்களை என்மேல்
பரிசோதித்துப் பழகுகிறது.
அது
தன் பற்களையும் என்மேல்
பிரயோகித்துப் பார்க்கும் முன்
நான்
பயணப்பட்டாக வேண்டும்.
எனக்குள் கிடக்கும்
நதிகளை மெல்லமாய்த் தீண்டிப் பார்க்கவும்,
கால்களுக்குக் கீழே
புதையுண்டு கிடக்கும்
கடல்களைக் கொஞ்சம் தோண்டிப் பார்க்கவும்.
