உன்னைப் பிரிந்தபின்
என்
வாழ்க்கை வயலில்
விளைச்சலே இல்லை,
என்
ஆனந்தத் தோட்டத்தின்
திராட்சைச் செடிகள்
வைக்கோல்களாய்
உருமாறிவிட்டன.
என்
கனவுகளின் கதவிடுக்கில்
இன்னும்
உன் குரலே கசிகிறது
நாம்
செலவிட்ட பொழுதுகளின்
விழுதுகளில் தான்
ஊசலாடுகிறது
எனது இயக்கமும்
உயிரின் மயக்கமும்.
என்றெல்லாம் சொல்வாய்
என
நம்பிக் கொண்டிருந்தேன்.
உன்
பிரிவின் கண்ணீர் துளியைக்
கையில் ஏந்தியபடி.
உற்சாக அரட்டையும்,
பரவச விளையாட்டுமாய்
ஆனந்தமாய்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
மழலைகளுடன்.
உறுத்தலாய் இருக்கிறது.
உன் மழலைகள் யாருக்கும்
என்
பெயர் இல்லை.
