ஆட்டைத் தொலைத்த
இடையனைப் போல
தேடிக் கொண்டிருக்கிறேன்
கவிதை வரிகளை,
அது
யாராலோ
களவாடப்பட்டிருக்கலாம்.
வேண்டுமென்றே
வெளியேறிச் சென்றிருக்கலாம்.
முள் செடிகளிடையே
முடங்கியிருக்கலாம்.
பள்ளத்தில் விழுந்து
காயமாகியிருக்கலாம்.
அல்லது
வெள்ளத்தில் விழுந்து
மாயமாகியிருக்கலாம்.
எனினும்
தேடல் தொடர்கிறது.
கட்டப்படாத
வார்த்தைக்குக்
கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது.
தொலைந்த ஆட்டின்
வரவுக்காய்
மலையடிவாரத்திலேயே
காத்திருக்கின்றன
மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளும்.
