ஏதோ ஓர்
தூரத்து இலக்கை
இலட்சியமாய்க் கொண்டு
என்னுடைய
கவிதைகள்
ஓடத்துவங்குகின்றன.
பல வேளைகளில்
மரத்துப் போய்க்கிடக்கும்
கால்களை
நான் தான்
வலுக்கட்டாயமாய்
வெளியே அனுப்புகிறேன்.
எல்லையின் வரைபடத்தை
உள்ளுக்குள்
எழுதிக் கொண்டாலும்
அது
தலை தெறிக்க ஓடுகிறது
தாறுமாறாய்ப் பாய்கிறது.
நான் தடுப்பதில்லை.
அதற்குரிய சுதந்திரத்தை
நான் கொடுப்பதில்லை,
அதுவாய்
எடுத்துக் கொள்கையில்
எதிரே நிற்பதும் இல்லை.
திசைகளையும்
பருவங்களையும்
மறந்து விட்டு
பல வேளைகளில் அது
எங்கோ சென்று
அமர்ந்து விடுகிறது.
பின்
வரைபடத்தைத்
தூர எறிந்து விட்டுத்
துயில் கொள்கிறது.
நான்
என் குறிப்பேட்டில்
இலட்சியத்தை இடம் மாற்றிவைக்கிறேன்.
கடைசியில்
போட்டுக் கொள்கிறேன்
என் பெயரை.
