மிருக காட்சி சாலை.
சைவச் சிறுத்தைகளின்
சரணாலயம்
இந்த மிருக காட்சி சாலை.
இங்கு
வெளியே நிற்கும் மனிதர்களை
வேடிக்கை பார்க்கின்றன விலங்குகள்.
வெறித்துப் பார்க்கும்
வேங்கையின் விழிகளில்
வேர்க்கடலை எறிந்து விளையாடும்
விடலைக் கூட்டம்.
சீறுவதை மறந்து
சிரித்துக் கொண்டிருக்கின்றன
சிங்கங்கள்.
அதன் மூக்கின் மேல்
சிறுகல் எறிகிறார்கள் சிறுவர்கள்.
சங்கிலிகளின் நீளம் கொண்டு
சாம்ராஜ்யத்தின் எல்லை வரையும்
யானைகள்.
எட்டாத் தூரத்திலிருந்து எட்டிப் பார்க்கும்
குழந்தைகள்.
பற்கள் பிடுங்கப் பட்ட
பாம்புகள்
படமெடுப்பதை மறந்து போயிருக்க
பார்வையாளர்கள்
படமெடுக்கிறார்கள்.
காட்டெருமைகளும்
காண்டா மிருகங்களும்
கம்பிகளுக்குள் விழுந்து கிடக்கின்றன
கொம்புகளை மடக்கி வைத்து விட்டு.
எங்கும்,
எங்கும், கூண்டுகள் !!
எல்லா அறைகளுக்குள்ளும்
சாயம் போக்கப்பட்ட.
துருப்பிடித்துப் போன வீரம்.
வெளியே விட்டால் கூட
வெயிலடிக்கிறதென்று
கூண்டுக்குத் திரும்பக் கூடும்
இந்த
பரம்பரைப் புலிகள்.
இரும்புக் கம்பிகள்
இடையே இருப்பதால்
இரண்டடி தூரத்தில்
தைரியம் சுமந்து திரியும் மக்கள்.
நமக்கெல்லாம்
வேடிக்கை பார்ப்பது
தேசியப் பொழுதுபோக்காகிவிட்டது.
இல்லையேல்
நம் வீரத்தை சுரண்டி,
பற்களைப் பிடுங்கி
கூண்டுக்குள் அடைத்தவர்களைப் பார்த்தே
கோஷமிட்டுக் கிடப்போமா ??
