நிழல்கள்
இன்னும் வெளுக்கவில்லை.
சத்தமில்லாத
இரவு
அடிக்கடி வந்து
கவனத்தைக் கலைக்கிறது.
கைகளில்
விரிந்திருந்த
பைபிளின் உள்ளே
நோவாவின் பேழைக்குள்
பேரிரைச்சல்.
வார்த்தைகளின் கதவு
படீரெனத் திறந்து கொள்ள
பிசுபிசுப்பாய்
ஒட்டிய
பேழையின் அடியில் விழுந்தேன்
வெகு வேகமாய்.
இருட்டும்,
எச்சங்களின் வீச்சமும்,
கோர மிருகங்களின்
எச்சில் வடியும் கடைவாய்களும்
பயத்தையும்
அருவருப்பையும் அள்ளி வீச
எதிரே
சிரித்துக் கொண்டிருந்தார்
நீள் தாடி
நோவா.
அடுத்த வினாடி
வெளியே தெறித்தேன்.
மின்மினிகள் சில படபடத்தன.
அவற்றில் சில
பேழைச் சாரளம் திறந்து
வெளியேறி
சுவரில் மோதியதில்
சுவரில் டைட்டானிக் சிரித்தது.
கலைந்த கனவுகள்
மீண்டும் வந்து
என்னை உலுக்க
முதுகில் மட்டும் இன்னும்
மூழ்கிப் போகாத நோவாவின் பேழை
பிசுபிசுப்பாய் ஒட்டியது.
