பிடிக்காதவர்கள்
படியேறி வருகையிலும்
மிதியடிகள் சொல்கிறன
நல்வரவு.
ஃ
அடுத்த வீட்டு
நபர்களின் பெயர்களை
தெரிந்து கொள்ளாமலேயே
தீர்ந்து போய்விடுகிறது
வாழ்க்கை.
ஃ
கேளுங்கள் தரப்படும்
தவறாகிறது.
ஆலய முற்றங்கள் கேட்கின்றன
ஆண்டவனுக்குத் தரப்படுகிறது.
ஃ
தோல்வியில்
கற்றுக் கொள்ள வேண்டிய
முதல் பாடம்,
வெற்றி பெற்றவனைப் பாராட்டுதல்.
ஃ
எல்லா
அரசு அலுவலகங்களிலும்
லஞ்சம் இருப்பது போலவே,
அலுவலகங்களின் பின்னால்
இருக்கிறது
சிறுநீர் வாசனையுடன் ஒரு சுவர்
ஃ
எல்லா வீடுகளிலும்
வளர்கின்றன
விளம்பரம் பார்த்தோ
சினிமா நடனம் பார்த்தோ
சோறுண்ணும் மழலைகள்.
ஃ
அடுத்த வீடு
அமைதியாய் இல்லையென்றே
சாதிக்கின்றன.
சத்தமாய் இருக்கும்
அத்தனை வீடுகளும்.
ஃ
வீட்டில்
கணவனைச் சோதிக்கும்
உரிமையை
மனைவியோடு சேர்ந்து
பங்கிட்டுக் கொள்கின்றன
சீரியல்கள்
ஃ
தேர்
நுழையாத தெருவுக்குள்
சிரிக்கின்றன
தேர் செய்ய
வெட்டப்பட்ட மரத்தின்
மிச்சங்கள்
ஃ
பார்க்க நேர்ந்ததில்லை
வாழ்வில்.
முதலாம் ஆண்டு
நினைவு அஞ்சலி பெறும்,
நாயையோ
பூனையையோ
ஃ
